வரலாறு தான் உங்கள் மவுனத்தை தீர்மானிக்கும் -சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் ட்வீட்

மகாராஷ்டிரா அரசு  விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி இடிக்கப்பட்டது. தற்பொழுது அவரின் கட்டடங்களை இடிக்கக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பணிகள் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது  பதிவில், காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி அவர்களே உங்களின் பங்கு இருக்கின்ற மகாராஷ்டிரா ஆட்சி எனக்கு இழைக்கும் கொடூரங்கள் ஒரு பெண்ணாக உங்களை கவலைப்படச் செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கர்  வழங்கிய அரசியல்  கொள்கைகளை கடைப்பிடிக்க உங்களது  அரசுக்கு நீங்கள் கூற மாட்டீர்களா ? பெண்களின் துயரங்கள் என்னவென்று  உங்களுக்குத் நன்றாகத்  தெரியும். என்னைப் போன்ற பெண்ணை மகாராஷ்டிரா அரசு  துன்புறுத்துவது குறித்து வரலாறு தான் உங்கள் மவுனத்தை தீர்மானிக்கும் . இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.