பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தகவல்.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபக்கம் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெங்களுருவில் காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் கூட்டம்:

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது, தேர்தல் பிரச்சாரம், கூட்டம் என பாஜகவுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டது.
என்டிஏ கூட்டம்:

இதுபோன்று, நேற்று பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 39 கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. எனவே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைமையிலான கூட்டணி பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மாயாவதி அறிவிப்பு:

இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். சாதிய மனப்பான்மையுடன் முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்க்கிறது. அதே நேரத்தில் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ளது. எனவே இந்த 2 கட்சிகளிடமிருந்தும் பகுஜன் சமாஜ் விலகியே இருக்கும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
தனித்து போட்டி:
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி, தனது கட்சி 2024 மக்களவைத் தேர்தலிலும், அதே போல் மாநில சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் என்று உறுதிப்படுத்தினார். அதாவது, மாயாவதி தனது கட்சி 26 காட்சிகளை கொண்ட இந்தியக் கூட்டணியிலோ அல்லது 39 உறுப்பினர்களைக் கொண்ட என்டிஏ கூட்டணியிலோ செல்லாது என்பதை உறுதிப்படுத்தினார். ஏற்கனவே இரண்டு கூட்டணியிலும் சேராமல் இருந்து வரும் பகுஜன் சமாஜ் கட்சி, வரும் தேர்தலும் அதே நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.