டெலிவரி வேலை செய்றீங்களா? காசை மிச்சப்படுத்தும் 3 பெஸ்ட் EV ஸ்கூட்டர்கள்!

தினமும் 80–120 கி.மீ வரை ஓட்டுபவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்க முடியும்.

Hero Image

டெல்லி : சுவிகி (Swiggy), சொமேட்டோ (Zomato), அமேசான் (Amazon) அல்லது பிளிங்கிட் (Blinkit) போன்ற நிறுவனங்களில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்பவர்களுக்கு, அவர்களது இருசக்கர வாகனமே அவர்களின் வருமானத்திற்கான முக்கியக் விஷயம். பெட்ரோல் விலை விண்ணை முட்டும் இந்தக் காலத்தில், எரிபொருளுக்காகச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் மிச்சப்படுத்தப்பட்டால், அது நேரடியாக நமது பாக்கெட்டிற்கு லாபமாக வந்து சேரும்.

அதனால்தான், பாரம்பரிய பெட்ரோல் பைக்குகளில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (EVs) மாறுவது இன்றைய டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய கேம்-சேஞ்சராக மாறியுள்ளது. இந்நிலையில், தினசரி அதிக மைலேஜ் ஓட்ட வேண்டிய டெலிவரி வேலைகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏன் மிகவும் பொருத்தமானவை என்பதற்கான காரணங்கள் மற்றும் சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரங்கள் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஏன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற வேண்டும்?

பிரமிக்க வைக்கும் சேமிப்பு: பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தினமும் 80 முதல் 120 கி.மீ வரை ஓட்டுவது பெரிய மாதச் செலவை ஏற்படுத்தும். ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டிலேயே முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் ரூ. 20 முதல் ரூ. 40 வரை மட்டுமே செலவாகும்.

குறைந்த பராமரிப்புச் செலவு : எலக்ட்ரிக் வாகனங்களில் நகரும் பாகங்கள் மிகக் குறைவு. இதில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஸ்பார்க் பிளக் சுத்தம் செய்யும் தொல்லை இல்லை, மற்றும் அதிகப்படியான டிராஃபிக்கில் கிளட்ச் பிளேட் எரிந்துவிடும் என்ற கவலையும் தேவையில்லை.

கியர் மாற்றும் டென்ஷன் இல்லை: நகர்ப்புறங்களின் நரகம் போன்ற டிராஃபிக்கில் தொடர்ந்து கியர் மாற்றுவது உடல் ரீதியாக மிகவும் சோர்வைத் தரும். ஆட்டோமேட்டிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 10 மணி நேர ஷிப்ட் வேலைகளையும் மிகவும் எளிமையாகவும், மன அழுத்தமின்றியும் மாற்றுகின்றன.

நம்பகமான செயல்பாடு: நவீன கால எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தண்ணீர் புகாத (Water-resistant) உறுதியான பேட்டரி பேக்குகள் மற்றும் அதிக டார்க் திறனுடன் வருவதால், தினசரி நகர்ப்புற வேலைகளை எந்தத் தடையுமின்றி எளிதாகச் சமாளிக்கின்றன.

டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்:

ஓலா S1 X (Ola S1 X)

அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலை ஆகிய இரண்டையும் சரியாகச் சமன் செய்வதால், ஓலா S1 X ஸ்கூட்டர் டெலிவரி ஊழியர்கள் மத்தியில் மிக விரைவாகப் பிரபலமடைந்து வருகிறது. பலரும் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மைலேஜ் /ரேஞ்ச்: பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் இது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ முதல் 150 கி.மீ வரை பயணம் செய்யும் திறன்கொண்டது. இது ஒரு நாளின் முழு டெலிவரி ஷிப்டையும் எளிதில் தாங்கும்.

வேகம் மற்றும் செயல்பாடு: இதில் உள்ள பவர்ஃபுல் மோட்டார் நகர்ப்புற நெரிசல்களில் எளிதாக சென்று வாடிக்கையாளர்களுக்கு விரைவாக ஆர்டர்களைச் சேர்க்க உதவுகிறது.

டெலிவரிக்கு ஏன் சிறந்தது?: இதன் அகலமான தரைப்பகுதி (Wide floorboard) உணவு டெலிவரி பைகள் அல்லது மளிகைப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கப் பெரிதும் உதவுகிறது. குறைந்த இயக்கச் செலவு காரணமாக இது முழுநேர கிக் ஒர்க்கர்களுக்கு அதிக லாபம் தரும் நண்பனாக இருக்கிறது.

டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube)

இந்தியக் குடும்பங்களின் நம்பிக்கைக்குரிய பிராண்டான டிவிஎஸ் தயாரிப்பான இந்த ஐகியூப், எலக்ட்ரிக் பிரிவிலும் தனது உயர்தர கட்டமைப்பு மற்றும் உறுதியை நிரூபித்துள்ளது.

மைலேஜ் / ரேஞ்ச்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாடலைப் பொறுத்து, இது ஒருமுறை முழு சார்ஜில் சுமார் 100 கி.மீ முதல் 140 கி.மீ வரை மைலேஜ் தரும்.

ஸ்மூத்: நீண்ட நேரம் ரோட்டில் பயணம் செய்யும்போது உங்களின் முதுகைப் பாதுகாக்க ஏதுவாக, இதன் சீட் குஷன் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெலிவரிக்கு ஏன் சிறந்தது?: குறுகிய தெருக்களிலும், கூட்ட நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதிகளிலும் கனமான பார்சல்களுடன் இதை எளிதாகக் கையாளலாம். இதன் நிலைத்தன்மை டெலிவரி ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.

ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)

இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் உறுதியான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதில் பெயர்பெற்ற ஏத்தர் நிறுவனம், குடும்பப் பயன்பாடு மற்றும் லக்கேஜ் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ள மாடல் தான் இந்த ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர்.

மைலேஜ் / ரேஞ்ச்: முழு சார்ஜில் தோராயமாக 105 கி.மீ முதல் 123 கி.மீ வரை பயணிக்கலாம்.

இடவசதி (Storage): இத்துறையிலேயே மிகவும் அகலமான தரைப்பகுதி மற்றும் பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான பார்சல்களைக் கூட சிரமமின்றி எடுத்துச் செல்லலாம்.

டெலிவரிக்கு ஏன் சிறந்தது?: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள், உறுதியான கட்டமைப்பு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஷிப்ட் நேரங்களுக்கு இடையில் வண்டியை சார்ஜ் செய்ய ஆகும் நேரம் மிகக் குறைவு.

விலை எவ்வளவு?

ஓலா S1 X (Ola S1 X)

  • எக்ஸ்-ஷோரூம் விலை: இதன் தொடக்க விலை சுமார் ரூ. 70,000 முதல் ரூ. 1.00 லட்சம் வரை (பேட்டரி திறன் மற்றும் வேரியண்டைப் பொறுத்து) அமைகிறது.
  • ஆன்-ரோடு விலை: மாநிலங்களின் சாலை வரி மற்றும் இன்சூரன்ஸ் சேர்த்து தோராயமாக ரூ. 75,000 முதல் ரூ. 1.10 லட்சம் வரை வரக்கூடும்.

டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube)

  • எக்ஸ்-ஷோரூம் விலை: இதன் தொடக்க விலை சுமார் ரூ. 1.07 லட்சம் முதல் தொடங்கி, டாப் எண்ட் வேரியண்ட் ரூ. 1.45 லட்சம் வரை விற்கப்படுகிறது.
  • ஆன்-ரோடு விலை: மாநிலங்களைப் பொறுத்து இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 1.15 லட்சம் முதல் ரூ. 1.55 லட்சம் வரை இருக்கக்கூடும்.

ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)

  • எக்ஸ்-ஷோரூம் விலை: இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஆன்-ரோடு விலை: இதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 1.20 லட்சம் முதல் ரூ. 1.58 லட்சம் வரை வரக்கூடும்.

உங்களுக்கு எது பெஸ்ட்

குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தந்து உங்களது தினசரி லாபத்தை அதிகரிக்க ஓலா S1 X-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.

நீண்ட கால உழைப்பு, அருமையான சவுகரியம் மற்றும் கரடுமுரடான உறுதியான கட்டமைப்பு வேண்டுமானால் டிவிஎஸ் ஐகியூப் சிறந்த தேர்வாகும்.

பெரிய அளவிலான லக்கேஜ் இடவசதி மற்றும் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்பட்டால் ஏத்தர் ரிஸ்டா உங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.