நாளை முதல் ஆட்டோ, பஸ் டாக்சி கட்டணம் உயர்வு – எங்கு தெரியுமா?

கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-ல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதுபோன்று, 1.5 கி.மீட்டருக்கான ஆட்டோ கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், 5 கிலோ மீட்டர் வரையில், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்குமேல், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.18 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 1500 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்படுகிறது. கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்