வானிலிருந்து பொழியும் எலி மழை! ஆஸ்திரேலியாவை தாக்கும் எலி படைகள்..!

ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள்,விவசாய நிலங்கள் போன்ற அனைத்தும் லட்சக்கணக்கான எலிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும்,எலிகளினால் அங்குள்ள மக்களுக்கு பிளேக் நோயும் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியவில்,மில்லியன் கணக்கான எலிகள்,வீடுகள் மற்றும் விவசாயப் பண்ணைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால்,அங்குள்ள விவசாயிகளும்,மக்களும் எலிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

மேலும்,கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அதனால், அறுவடை பயிர்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல்,சிலர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு முழுவதும் பிளேக் நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளனர்.

இதன்காரணமாக,ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் எலிகள் பிரச்சினையை சமாளிக்க 50 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லூசி தாக்ரே, எலிகளின் படையெடுப்பு குறித்து வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில்,ஒரு இயந்திரத்திற்குள் இருந்து இறந்த மற்றும் உயிருள்ள எலிகள் மழைப் பொழிவை போன்று தரையில் விழுவதைக் காட்டுகிறது.

இதற்கிடையில்,சமூக ஊடகங்களில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவந்து அதனை பார்க்கும் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.