இங்கிலாந்தை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி 170 ரன்கள் குவித்தார். 62 பந்துகளில் அரை சதத்தை அடித்த ஹீலி அடுத்த 38 பந்துகளில் சதம் விளாசினார்.

ஹீலி 170 ரன்கள் எடுத்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக அடித்த ரன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2005-ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 105 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டனின் சாதனை முறியடித்தார்.

ஹீலி தொடர்ச்சியாக இரண்டாவது சதம் அடித்துள்ளார். அரையிறுதி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 129 ரன்கள் அடித்தார். ஹீலி தனது சதத்தின் மூலம் உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஹீலியைத் தவிர ரேச்சல் ஹெய்ன்ஸ் (68), பெத் மூனி (62) ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 357 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 71 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  இங்கிலாந்துக்காக நடாலி சிவர் சதம் அடித்தார். நடாலி சிவர் 121 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தம் 148 ரன்கள் குவித்தார்.  ஆஸ்திரேலியா சார்பில் அலனா கிங் மற்றும் ஜெஸ் ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மேகன் ஸ்காட் 2 விக்கெட்டுகளையும், தாலியா மெக்ராத் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

author avatar
murugan