மாணவர்கள் கவனத்திற்கு…நாளை முதல் இந்த சான்றிதழ் பெறலாம்;ஜூன் 29-ம் தேதி இதற்கு கடைசி நாள் – அரசு தேர்வுகள் இயக்ககம்!

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை  முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை  (24-ம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளிகள் வாயிலாக நாளை காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.மேலும்,10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பித்த நிலையில் ஜூன் 29-ம் தேதி இதற்கு கடைசி நாளாகும் என்றும்,பள்ளிகள் மூலம் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here