2-ம் நாள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்ப்பு..!

2-வது நாளில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல்  கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75*, ஜடேஜா 50* ரன்கள் எடுத்து விளையாடி வந்தனர். இந்நிலையில், இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜடேஜா டிம் சவுத்திடம் போல்ட் ஆனார். அடுத்து இறங்கிய விருத்திமான் சாஹா 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப  அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து 105 ரன்கள் சேர்த்து அசத்தினார். பின்னர், இறங்கிய அஸ்வின் சிறப்பாக விளையாடி 38 ரன்கள் குவித்தார்.

இறுதியாக இந்திய அணி  தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் 345 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். அதன் பின்னர், நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம், வில் யங் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடங்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர்.

இருப்பினும் , இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். இறுதியாக 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 57 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 129 ரன்கள் சேர்த்தனர். களத்தில் டாம் லாதம் 50*, வில் யங் 75* ரன்கள் எடுத்து உள்ளனர். இந்திய அணியை விட நியூசிலாந்து 216 ரன்கள் பின்தங்கியுள்ளது.

author avatar
murugan