“படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம்;அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி” – ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு..!

மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வாணியம்பாடி அருகே முன்விரோதத்தால் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில்,சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இயலாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த வசீம் அக்ரம் அவர்களின் குடும்பத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நபிகள் நாயகத்தின் கொள்கையை மனதிலே ஏந்தி, சமூக அக்கறையோடு எதிர்கால சமுதாயம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், மன வலிமையோடும் இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வாழ்ந்து வந்த திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. வசீம் அக்ரம் அவர்கள் இஸ்லாமியர்களின் கடமையான ஐந்து வேளை தொழுகையின் ஒரு பகுதியாக, 10.9.2021 அன்று பள்ளிவாசலில் தொழுகை முடித்து தன்னுடைய மகனோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், சட்டம்-ஒழுங்கை சரியாக பேண முடியாத திமுக அரசின் மெத்தனப் போக்கால், காவல் துறையின் மெத்தனத்தால், நட்டநடு ரோட்டில் தன்னுடைய மகன் பிஞ்சுக் குழந்தையின் கண் எதிரே, சமூக விரோதிகளால் கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் மரணச் செய்தி அறிந்ததும் தாங்கொண்ணா துயரமும், தாள முடியா வேதனையும் அடைந்தோம்.

இந்த நாட்டில் சமூக சிந்தனையோடு நல்லதொரு சமுதாயம் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவர் வாழவே முடியாதா? என்ற எண்ணத்தை அன்னாரின் மரணம் எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. திரு. வசீம் அக்ரம் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எந்த வார்த்தைகளைச் சொன்னாலும் இட்டு நிரப்ப முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் இனம்கண்டு,கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத்தருவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இருந்தாலும், ஒரு நல்ல மனம், சட்டம்-ஒழுங்கை பேண முடியாத அரசால் நம்மைவிட்டுச் சென்றிருக்கிறது. அன்னாரின் இழப்பை ஈடுசெய்கின்ற விதமாக தமிழக அரசு அவர்தம் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாகவும், எதிர்காலத்தை நல்ல முறையிலே வழிநடத்திச் செல்ல அவர்தம் குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபருக்கு அரசு வேலையும் வழங்கி, உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதே வேளையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி, கழகமும் அவர்தம் குடும்ப இழப்பிலே தோளோடு தோள் நின்று பங்கெடுத்துக்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.