கேழ்வரகில் நெய் வடிகிறதாம்.! ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது ஆந்திர காவல்துறையா ? - முக ஸ்டாலின்

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதல்வர்

By balakaliyamoorthy | Published: May 23, 2020 07:49 PM

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். அப்படியானால் அவரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறையா? - முக ஸ்டாலின் அறிக்கை 

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த ஆர்.எஸ்.பாரதியின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது என்றும் அது தமிழக மக்களையும் திசை திருப்பாது எனவும் ஸ்டாலின் கண்டனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனிடையே, சேலம் மாவட்டம் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முடிந்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைதானார்.

மேலும், ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு, அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசு மீது ஸ்டாலின் புகார் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். எதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ்.பாரதி பத்திரிகை விளம்பரத்துக்காக புகார்களை கொடுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது, முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தடுப்பில் தனது தோல்வியை திசை திருப்ப பழனிசாமி எத்தனை கபட நாடகங்கள் நடத்தினாலும், மக்கள் மன்றத்தில் அவரது ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்த திமுக தயங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். அப்படியானால் அவரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறையா? கைது செய்திருப்பது தமிழகக் காவல்துறை என்றால், அரசுக்குச் சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?  கைது நடவடிக்கைக்கும், இவருக்கும் சம்பந்தம் இல்லையாம், முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு, பதிலைப் படிக்கிறார். கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேட்டுக் கொள்ளுங்கள். ஏற்கனவே இதுகுறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பது இவருக்குத் தெரியாதா? யாரும் இவருக்குச் சொல்லவில்லையா? என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc