Asia Cup 2023 : இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் விதிவிலக்கு.! ‘ரிசர்வ் டே’ அறிவிப்பு.!

By

Indian Cricket Team Captain Rohit Sharma - Pakistan Cricket Team Captain Babar Azam

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தானில் நடைபெரும் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இனி வரும் போட்டிகள் இலங்கையில் மட்டுமே நடைபெற உள்ளன.

கடந்த மாதம் 30ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது சூப்பர் 4 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில், இந்தியா பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தேர்வாகி உள்ளன.

ஆசிய கோப்பை தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் லீக் போட்டியானது கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அதில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து முடித்தவுடன் தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வீதம் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுகிழமையன்று  கொழும்பு மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளன. தற்போது அந்த போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த நாளில் மழையால் ஆட்டம் தடைபட்டால் அடுத்த நாள் போட்டி மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் 10ஆம் தேதி மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மற்ற அணிகள் மோதும் போட்டிகளுக்கு எதுவும் கூறாமல் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ அறிவித்து இருப்பது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.