#Justnow:கரையைக் கடந்த அசானி புயல்;ஆனால் கனமழை,60 கிமீ வேகத்தில் காற்று – வானிலை மையம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து.

அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்,50 கிமீ வரை காற்று வீசக்கூடும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஆந்திராவின் வடகடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.இதனைத் தொடர்ந்து,அசானி புயல்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திராவில் மசிலிப்பட்டணம் மற்றும் நர்சாபுரம் இடையே  அமைதியாக கரையக் கடந்துள்ளது.

புயல் கரையைக் கடந்தபோதிலும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.