கலைகளின் வழியாக கலைஞர்கள் வாழ்வார்கள்…! இளையராஜாவும் வாழ்வார்…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் காலமானார்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. இவரது ஓவியங்களை பார்க்கும் போது ஓவியமா? அல்லது புகைப்படமா? என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர். இவர் கடந்த வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்திற்கு சென்ற இவர் சில நாட்களுக்குப்பின் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உடலில் சளி போன்ற தொந்தரவுகள் காணப்பட்ட நிலையில் நண்பர்களிடம் ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அவரது குடும்பத்தில் பலருக்கும் கொரானா தொற்று ஏற்பட்ட நிலையில், இளையராஜாவும் சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மாரடைப்பு காரணமாக இளையராஜா காலமானார்.

இந்நிலையில், இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘ தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர். ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்.’என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.