நம்மில் அதிகமானோர் வெளியில் சென்றாலே விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் பாணி பூரி முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த பாணி பூரியை நாம் கடையில் வாங்கி சாப்பிடும் போது, அதனை எந்த அளவுக்கு சுகாதாரமான முறையில் செய்கிறார்கள் என நமக்கு தெரியாது.
அதற்கு பதிலாக நாம் நம் வீடுகளிலேயே சுத்தமான முறையில் செய்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் நாம் வீட்டிலேயே பாணி பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பாணி பூரி – 100 கிராம்
- உருளை கிழங்கு – 250 கிராம்
- வெங்காயம் – 3
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- புதினா – கால் கட்டு
- கொத்தமல்லி – கால் கட்டு
- பச்சை மிளகாய் – 2
- எலுமிச்சை – 2
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாணி பூரி
கடையில் 100 கிராம் பாணி பூரி பொறியை வாங்கி, வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் அதனுள் பொறியை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழங்கு மசாலா
முதலில் கிழங்கை அவித்து எடுத்து, அதனை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு மசித்து அதனுள் 1 ஸ்பூன் மிளகாய்தூள், நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாணி பூரி ரசம்
முதலில் மிக்சியில் புதினா மற்றும் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், உப்பு சீரகம் ஆகியவற்றை போட்டு, சற்று தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள கலவையில், எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும். பின் அதனுள் சிறிதளவு உப்பு சேர்த்து, நமக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவினால் பாணி பூரி ரசம் தயார்.