இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் விண்ணப்பிக்கலாம்-சென்னை பல்கலைக்கழகம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில், பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியது.

அதனைதொடர்ந்து, B.E/B.Tech மாணவர்களின் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் இந்தியத்தளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நடைபெறும் எனவும், எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர, ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் www.unom.ac.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள மாணவர்கள், உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.