தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என சீமான் அறிக்கை. 

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டுவைக்கும் பேராபத்தாகும்.

இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்? அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் ஒன்றிய அரசின் செயல் மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.

பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, இந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான கொடுஞ்செயல். ஆகவே, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், இந்நாட்டிலுள்ள தேசிய இனங்களின் மொழிகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய முன்னுரிமையும், முதன்மைத்துவமும் அளிக்கப்பட வேண்டும்.

மாறாக, இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிபடத் தெரிவிக்கிறேன். இத்தோடு, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு இந்தியாவின் துணையோடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை இச்சமயத்தில் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *