கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ தொடக்கம் – அமைச்சர் சேகர் பாபு..!

கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும்’ திட்டத்தை தற்போது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்,அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 3 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் நாளை முதல் ‘அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்’ தொடங்கவுள்ளது.

இந்நிலையில்,அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது தொடங்கி வைத்துள்ளார்.இந்நிகழ்வில்,அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:”தேவைப்படும் திருக்கோயில்களில் இதே போன்று ‘தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்ற விளம்பரப் பதாகையை நிறுவ உள்ளோம். இந்த தமிழில் அர்ச்சனை என்பது இன்று,நேற்று அல்ல,முன்னதாக 1971 ஆம் ஆண்டு  கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோதே,அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கண்ணப்பன் அவர்கள் இதை சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார். அதனை தொடர்ந்து,1974 ஆம் ஆண்டு அறநிலையத்துறைக்கு அதற்கான சுற்றறிக்கையை கண்ணப்பன் அவர்களால் அனுப்பப்பட்டது.

அதோடு நின்று விடாமல்,1998 ஆம் ஆண்டு இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது,அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழில்தான் அர்ச்சனை நடைபெறும் என்று சொல்லியிருக்கிறோம் என்பதை தவிர,விரும்பவர்கள் வேற்று மொழி அர்ச்சனையை செய்து கொள்ளலாம் என்பதை தடுக்கும் திட்டம் இது இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,பக்தர்களின் வழிபாட்டிற்கு பயனளிக்கும் இத்திட்டத்தில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்ற காரணத்தால்,இதனை செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சி எடுத்து வருகிறது.இதற்கு அனைவரும் முழு ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும்,இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய 14 போற்றி  புத்தகங்களை வடிவமைத்து முதல்வர் அவர்கள் தந்துள்ளார்,இது விரைவில் அனைத்து கோயில்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், எந்தெந்த குருக்கள் தமிழில் அர்ச்சனை செய்வார்கள் என்ற விவரத்தையும் வெளியிடவுள்ளோம்.அம்மன்,ஈசனுக்கு ஏற்ப தனித்தனியான போற்றிகள் முதல்வர் வெளியிட்ட பிறகு அனைத்து கோயில்களுக்கு அனுப்பப்படும்.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை எந்த மதத்தினராக இருந்தாலும்,எந்த வழிபாடாக இருந்தாலும் அவரவர் சுதந்திரமாக வழிபடுவதற்கு,அவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கும்,வழிபாட்டு தளங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு முதல்வர் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருகிறார்.

மேலும்,குடமுழுக்கு நடக்கும் பகுதிகளில் அங்குள்ள மக்கள் எதை விரும்புகிறார்களோ,ஆகமங்களை கடைபிடித்து  அதன்படி குடமுழுக்கு நடத்தப்படும்”, என்று தெரிவித்தார்.