கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது கடித்த பக்கத்து வீட்டு மலைப்பாம்பு …!

ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஒருவர் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பக்கத்து வீட்டு மலைப்பாம்பு கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரியாவில் வசிக்கும் 65 வயதான ஒரு நபர் திங்கள்கிழமை காலை தனது வீட்டில் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பின்னால் ஏதோ கடித்தது போன்று உணர்ந்தார்.பின்னர்,அவர் கழிப்பறைக்குள் பார்த்தபோது , ​5 அடி நீளமுள்ள அல்பினோ ரெட்டிகுலேட்டட் என்ற மலைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து,பாம்பை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக மீட்பு துறையினரை அவர் அழைத்தார்.

மேலும்,இது குறித்து போலீசார் கூறுகையில்,”பக்கத்து வீட்டுக்காரர் 11 விஷமற்ற பாம்புகளை தனது குடியிருப்பில் வளர்த்து வருகிறார்.இந்த மலைப்பாம்பு எவ்வாறு அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவரின் கழிப்பறைக்குள் நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.ஒருவேளை அது வடிகால்கள் வழியாகச் சென்றிருக்கலாம்.எனினும், பாதிக்கப்பட்டவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது”,என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,ஆஸ்திரியா இளைஞர் ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே கழிவறை சென்ற போது,அவரது பிறப்புறுப்பை மலைப்பாம்பு ஒன்று கடித்தது.

பின்னர்,அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.