நெல்லை : மாவட்டம் பாளையங்கோட்டையில் இயற்கையின் விசித்திரமான கணக்குப்படி, ஒரு குடும்பத்தில் ஒட்டுமொத்த உலகையுமே வியக்க வைக்கும் வகையில் ஒரு அபூர்வமான நெகிழ்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுமே வெவ்வேறு ஆண்டுகளில், ஆனால் ஒரே தேதியான ஜூன் 10-ஆம் தேதி பிறந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரே தேதியில் பிறப்பது என்பது அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வாகும்.

இந்த அதிசயத்திற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் மற்றொரு சுவாரசியமான சம்பவமும் இதில் இணைந்துள்ளது. இந்த மூன்று குழந்தைகளும் பிறப்பதற்குக் காரணமாக இருந்து, அவர்களுக்குப் பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் ரமோலா ஜேனட் டயானா அவர்களின் பிறந்தநாளும் இதே ஜூன் 10-ஆம் தேதிதான்.

ஒரே தேதியில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு, அதே தேதியில் பிறந்த மருத்துவரே பிரசவம் பார்த்துள்ளார் என்பதுதான் இந்த நிகழ்வை உலக அளவில் உற்றுநோக்க வைத்துள்ளது. கணித ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மிகவும் அரியதாகக் கருதப்படும் இந்த அபூர்வ நிகழ்வு தற்போது அதிகாரப்பூர்வமாக உலக சாதனையாகப் (World Record) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அசாத்திய சாதனைக்கான உலக சாதனை விருது வழங்கும் விழா, வரும் ஜூன் 15-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சாதனை படைத்த நெல்லைக் குடும்பத்தினருக்கும், மருத்துவர் ரமோலா ஜேனட் டயானாவிற்கும் அதிகாரப்பூர்வமாக உலக சாதனை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

ஒரே தேதியில் பிறந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நெல்லைக் குடும்பத்திற்கும், அந்த மருத்துவருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவித்து வருகின்றன.