சென்னை : முதல்வர் விஜயின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தனது சினிமா பயணம் மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவு குறித்து பேசியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் அவருடைய முதல் திரைப்படமான சிக்மா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில், இதற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தான் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக ஊடகத்திற்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் பேசியதாவது ஒரு திரைக்கலைஞரின் குடும்பத்தில் பிறந்த ஜேசன் சஞ்சய்க்கு, சிறு வயது முதலே சினிமா மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. பல திரைப்படங்களின் பிரீமியர் காட்சிகளைத் தவறாமல் பார்த்து வளர்ந்த அவருக்கு, திரைப்படங்களைப் பார்ப்பதே ஒரு பெரிய பொழுதுபோக்காக இருந்துள்ளது.

படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்று சினிமா உருவாக்கத்தைப் பார்த்த அனுபவங்களும், அவருடைய சினிமா ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளன.

சினிமாவில் நுழைய முடிவெடுத்தபோது, தனது பெற்றோர், சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் இது குறித்துப் பேசியுள்ளார். அனைவருமே மிக நேர்மறையாக (Positive) கருத்துகளைக் கூறி, அவருக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளனர். அவர்களது ஆதரவும், அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர் தனது முதல் படமான 'சிக்மா' (Sigma) படத்தை இயக்குவதற்குப் பெரும் பலமாக இருந்துள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'சிக்மா' படம் தொடங்கப்பட்டபோது, திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரைப் போல ஒரு இயக்குநராகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சய், இந்தத் திரைப்படத்தின் மூலம் தனது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கிறார்.