பா.ஜ.க.வினர் சிலை உடைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை !

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா,  பா.ஜ.க.வினர் சிலை உடைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரித்துள்ளார்.

அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய இருமாநில கட்சியினரிடமும் பேசியிருப்பதாகவும், பா.ஜ.க.வில் உள்ள எவரும் எந்தச் சிலை உடைப்புச் சம்பவங்களிலாவது ஈடுபட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிலைகள் உடைப்பு என்கிற செயலுக்கு பா.ஜ.க எப்போதுமே எதிரானது என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பெரியார் சிலை உடைப்புச் சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் எல்லா தலைவர்களின் பங்களிப்பையும் மதிக்க வேண்டும் என்றும் எந்த தலைவரையும், எந்தச் சிலைகளையும் அவமதிப்பதை பா.ஜ.க. கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரியார் போன்ற தலைவர்களுக்கு எதிரான எந்த மரியாதைக் குறைவான மற்றும் வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களையும்,வன்முறை நடவடிக்கைகளையும் பா.ஜ.க. ஏற்காது என்றும் அத்தகையவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment