பெண் புகைப்பட கலைஞர் மீது துப்பியதற்காக பிரபல அமெரிக்க பாடகருக்கு கைது வாரண்ட்

Marilyn Manson

அமெரிக்க பாடகர் மர்லின் மேன்சன் பெண் புகைப்பட கலைஞர் மீது துப்பியதால் கைது வாரண்ட் பிரப்பித்துள்ளனர்.

மர்லின் மேன்சன் என்று தொழில் ரீதியாக அறியப்பட்ட பிரையன் ஹக் வார்னர் ஒரு அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர், நடிகர் என்று பல்வேறு துறைகளில் அமெரிக்காவில் பிரபலமானவர்.

சமீப காலமாக அவர் மீது பல குற்ற வழக்குகள் வந்த வண்ணம் இருக்கின்றது. மேலும் பல முறைகேடு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் ஒரு இசை நிகழ்ச்சியில் பெண் புகைப்பட கலைஞர் மீது துப்பியதாக இசைக்கலைஞர் மர்லின் மேன்சனுக்கு எதிராக புதிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு நியூ ஹாம்ப்ஷயர் பெவிலியனில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது வீடியோகிராஃபர் பெண் ஒருவர் தன் மீது பாடகர் மேன்சனின் எச்சில் பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

இதைப்பற்றி அமெரிக்க காவல் துறை கூறுகையில், பாதிக்கப்பட்டவருக்கு “காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, ஆனால் மேன்சன் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏனெனில் துப்புதல் தகுதியற்ற உடல் தொடர்பு கொண்டது என தெரிவித்துள்ளனர்.

மேலும் மேன்சன், அவரது முகவர் மற்றும் சட்டக் குழு வாரண்டைப் பற்றி அறிந்திருந்தும் நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நியூ ஹாம்ப்ஷயருக்கு வர அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனால் அவர் மீது தற்போது புதிய கைது வாரண்ட் பிரப்பித்துள்ளனர்.

மேலும் அவர் மீது லாஸ் ஏஞ்சலஸில் பல்வேறு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளன, இருப்பினும் கலிபோர்னியாவில் அவர் மீது எந்தக் குற்றமும் தற்போதுவரை சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.