34 C
Chennai
Wednesday, July 28, 2021

“வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ” – ஓபிஎஸ்..!


8
/ 100


திமுக அரசின் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.அக்கூட்டத்தொடரில்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சில தமிழக வளர்ச்சி திட்டங்கள்,நீட் தேர்வு ரத்து போன்றவை குறித்து உரையாற்றினார்.

இந்நிலையில்,திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுநர் உரை குறித்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“ஆட்சியாளர்களின் கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநர் உரை என்றும்,அக்கொள்கைத் திட்டங்களுக்கு ஏற்ப நிதியை பகிர்ந்தளிக்கும் புள்ளி விவரங்களை கொண்டதே வரவு-செலவுத் திட்டம் என்றும் கூறியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.

பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தனது கொள்கைகளை, தனது திட்டங்களை தேர்தல் அறிக்கை வாயிலாகவும், பிரச்சாரங்கள் வாயிலாகவும் தி.மு.க. அறிவித்தது. அவற்றையெல்லாம் உள்ளடக்கி இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என நான் துருவித் துருவி பார்த்தேன். எனக்கு எதுவும் தென்படவில்லை.

பெட்ரோல்,டீசல் விலை:

அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இது குறித்து எந்த தகவலும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை.

உண்மை நிலை என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேலும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு மேலும் உயர்ந்தது என்பதுதான் நிதர்சனம்.

நீட் தேர்வு ரத்து:

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைபெறும் என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

ஆளுநர் உரையிலோ, “தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி அத்தகைய சட்டங்களுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாகத் தெரிகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்:

ஏழையெளிய,பாமர மக்களுக்குத் பயனளிக்கும் வாக்குறுதிகளான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குகின்ற திட்டம், நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும் என்கிற திட்டம், உளுத்தம் பருப்பை மீண்டும் வழங்கும் திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெறாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முதியோர் உதவித் தொகை; நகைக்கடன் தள்ளுபடி:

இதேபோல, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்கிற திட்டம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம் பெறாதது வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. ஏனென்றால், இவையெல்லாம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற திட்டங்கள், மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள்.

மின் கட்டணம் செலுத்தும் முறை:

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறாதது வருத்தத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தற்போது அடிக்கடி ஏற்படுகின்ற மின்வெட்டு தமிழ்நாட்டு மக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா நிவாரணத் தொகை:

2020 ஆம் ஆண்டு கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஆளுநர் உரை:

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறும், தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்குமாறும், தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்கள், சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகாரிக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதேபோன்று, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு தற்போது உள்ள வருமான வரம்பான 8 இலட்சம் ரூபாய் என்பதை 25 இலட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், ஆளுநர் உரையிலுள்ள வார்த்தைகளைப் பார்க்கும்போது, இந்தத் திட்டங்கள் எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம், உறுதிப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இவை எல்லாம் ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ என்ற எண்ணம்தான் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்:

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களில் இதுவரை 63.500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை மொத்தம் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, அதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. எனவே எத்தனை சதவிகித மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என்ற விவரம் மக்களுக்கு தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதியத் திட்டம்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதுகுறித்து ஆளுநர் உரையில் எதுவும் அறிவிக்கப்படாதது அவர்கள் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு குழு:

மற்றபடி ஏற்கெனவே கோவிட் பெருந்தொற்றுக்காக செலவழிக்கப்பட்டது, துறைகளுக்கு பெயர்கள் மாற்றப்பட்டது, நீட் தேர்வு குறித்து குழு அமைக்கப்பட்டது, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது, கச்சத்தீவை மீட்க அழுத்தம் கொடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது, போன்றவை ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தாலும் அதனால் எந்தவொரு பெரிய மாற்றமும் நிகழப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

ஆளுநர் உரை அல்ல,மாறாக குழப்பமான உரை:

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கியமான திட்டங்கள். கொள்கைகள் இந்த ஆளுநர் உரையில் இடம் பெறாததை. பார்க்கும்போது, ‘வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ’ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இது ஆளுநர் உரை அல்ல, உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை.”என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Related news