இரண்டு மாதங்களில் 11 பில்லியன் டாலர்களை இழந்த ஜாக் மா!

உலக பணக்கார பட்டியலில் 25 ஆம் இடத்தில் இருக்கும் ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களில் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த அலிபாபா என்ற நிறுவனம், தற்பொழுது உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. அதன் இணை நிறுவனர் ஜாக் மா-வை பற்றி அறியாதவரே இல்லை. தற்பொழுது இ-காமர்ஸ் நிறுவனத்தில் சீனாவில் ஆய்வுகள் அதிகரித்த பின், அக்டோபர் மாத இறுதியில் ஜாக் மா-வின் தனது சொத்து மதிப்புகளில் இருந்து 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வலைத்தளத்தில் அறிவிப்பின்படி, ஜாக் மா-வின் சொத்து மதிப்பு 61.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்பொழுது 50.9 பில்லியன் டாலராகசரிந்துள்ளது. இதனால் உலக பணக்கார பட்டியலின்படி ஜாக் மா, 25 ஆம் இடத்தில் இருந்து வருகிறார். டிசம்பர் 24 ஆம் தேதி, அலிபாபா நிறுவனத்தின் தனியுரிமை (Monopoly) நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், செயல்பட முயற்சி செய்வதாக வழக்கு தொடர்ந்ததால், விசாரணையை சீனா அரசு தொடங்கியுள்ளது.

இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் குறையத் தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தின் கடன், காப்பீடு மற்றும் செல்வ மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை சரிசெய்ய அதிகாரிகள் அலிபாபா நிறுவனத்தை கேட்டுக்கொண்டனர். இதன்காரணமாக ஜாக் மா, தனது சொத்து மதிப்பில் இருந்து 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.