ஒடிசாவில் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி..!

ஒடிசாவில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. 

இந்த ஆகாஷ் ஏவுகணை சோதனை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இன்று (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் புதிய தலைமுறை ஆகாஷ் என்ஜி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணை 2.5 மாக் வேகத்தில் செல்லக்கூடியது. இது சோதனையின் போது குறிப்பிடப்பட்ட இலக்கான 30 கி.மீ. தொலைவில் சரியாக மேலே சென்று தாக்கி அழித்துள்ளது.

மேலும், இந்த ஏவுகணை 60 கி.மீ உயரம் வரை வான் இலக்கை தாக்கக்கூடியது. டி.ஆர்.டி.ஓ  கடந்த மூன்று நாட்களாக ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இந்த ஆகாஷ் ஏவுகணை சோதனை மூன்றாவது சோதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.