மேகதாதுவில் அணைக்கட்டுவது உறுதி …!நாளை முதல் ஆய்வுப் பணிகள் தொடக்கம் …!கர்நாடக நீர்பாசன அமைச்சர்

மேகதாது அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று  கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்தார்.

Related image

ஆனால் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை.கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் பின் மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர்  கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில்,மேகதாது அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதேபோல்  நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.