எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை!

By

medical team

செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது.

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும் அனுமதி அளித்தது. மேலும், அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து ஆராயலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதியை தொடர்ந்து, செந்தில் பாலாஜி நேற்று அம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகிறது.

அமலாக்கத்துறை கோரிய நிலையில் உடல்நிலையை பரிசோதனை செய்ய மத்திய மருத்துவக்குழு வர உள்ளது. 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால், செந்தில் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஓரிரு நாட்களில் இதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.