கூட்டணியில் தீவிரம் காட்டும் அதிமுக., பாமகவை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்.!

பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள்.

தமிழக சட்டப்பேரவை காலம் நிறைவடைவதை அடுத்து, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர்.

தேர்தல் தேதியை அறிவித்த பிறகு சட்டப்பேரவை கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜயகாந்த்துடன் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது. விரைவில்தேமுதிகவை அழைத்துகூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்