அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டும், அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஓபிஎஸ் தரப்பு வாதம் :
ஓபிஎஸ் தரப்பில் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது கட்சி தலைவர் எம்ஜிஆர் வகுத்த கொள்கைக்கு எதிரானது என்றும், இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் போட்டியில் நான் போட்டியிட தயார் எனவும், நிபந்தனைகளை மாற்றினால் தான் போட்டியிட தயார் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் தரப்பு வாதம் :
உச்சபட்ச அதிகாரம் பெற்ற பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. பொதுக்குழு முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதியாகவில்லை.
மேலும் ஓபிஎஸ் தனக்கென தனி கட்சி நடத்தி வருகிறார். அதிலிருந்து எங்களை நீக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். இதனால், யாருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படவில்லை. ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீஸும் கொடுக்காமல் கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் என ஈபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு:
சுமார் 7 மணிநேரம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் தற்பொழுது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.