ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் தொடங்கிய அதிமுக செயற்குழு கூட்டம் – புதிய அவைத்தலைவர் யார்?

சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில்,தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் இல்லாமல் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில்,இதனால்,புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.ஏனெனில்,அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பிறகு யாரும் தேர்வு செய்யப்படாத காரணத்தால் அப்பதவி காலியாக உள்ளது.

அதேசமயம்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,உட்கட்சி தேர்தல் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்,கட்சியின் கட்டுப்பாட்டை மீறி,களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி,அன்வர் ராஜாவை(கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர்),நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.