“வேளாண் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும்”- பாபா ராம்தேவ் வலியுறுத்தல்!

வேளான் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய அரசிடம் யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தினார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 80-க்கும் மேற்பட்ட நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசியல் கட்சிகள் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான விவசாயிகளுடன் மத்திய அரசுநடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், டெல்லி எல்லையில் ட்ராக்டர் பேரணி நடத்தினார்கள். அந்த பேரணி, வன்முறையாக மாறியது. இதனைதொடர்ந்து விவசாய சங்கங்கள், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேளான் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய அரசிடம் யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தினார். இதுகுறித்து ஒரு திருமண விழாவில் பேசிய அவர், வேளான் சட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவோ, விவசாயியாகவோ இந்த பிரச்சனை குறித்து பேசவில்லை என கூறிய அவர், இதிலிருந்து தீர்வு காண்பதற்காக தனி மனிதனாக பேசுவதாக கூறிய அவர், மத்திய அரசு, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கான கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.