16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் -பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் மத்திய அரசு  இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத 16 பேர் கொண்ட குழு  ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், இந்தியப் பண்பாட்டு ஆய்வுக் குழுவில் தமிழ்நாட்டுப் புலமையாளர்களையும் சேர்க்க மத்திய அமைச்சரை பிரதமர் வலியுறுத்த வேண்டும்.

தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் உரிய இடமில்லாமல், இந்திய வரலாறும் பண்பாடும் முழுமை அடையாது என்பதை ஏற்றுக்கொள்வீர்கள்.கடந்த ஆண்டு இதே மாதம் மாமல்லபுரம் பயணத்தில் தமிழ் பாரம்பரியத்தின் விழுமியத்தை உணர்ந்திருப்பீர்கள்.எனவே 16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.