காதலியைத் தேடிச்சென்றவர் 2017 லிருந்து காணவில்லை… முகநூலில் மலர்ந்த காதலால் விபரீதம்!

சுவிட்சர்லாந்திற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் நடைபாதையாக காதலியைத் தேடிச் சென்றவர் பாக்கிஸ்தானில் பிடிபட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த், தான் விரும்பிய ஒரு பெண்ணைச் சந்திக்கப் சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்தபோது அவர் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. மேலும் பிரசாந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத்திற்கு வந்தடைந்தார். அதாவது பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஏப்ரல் 2017 இல் காணாமல் போயிருந்தார். 30 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, அவர் பாகிஸ்தானில் சிக்கியிருப்பதை பிரசாந்தின் தந்தை பாபு ராவிடம் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.

மேலும் பிரஷாந்தின் நிலைமை குறித்து சஜ்ஜனார் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பேஸ்புக்கில் சந்தித்த ஒரு பெண்ணுடன் பிரசாந்த் காதல் கொண்டதாகவும், அந்த பெண் சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்ததால் பிரசாந்த் மனச்சோர்வடைந்ததாகவும் இமிக்ரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்விளைவாக பிரசாந்த் தனது காதலியை சந்திக்க பாஸ்போர்ட், விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நடைபாதை ஒன்றை கண்டுபிடித்து சென்றுள்ளார். அதாவது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி வழியாக சுவிட்சர்லாந்திற்கு குறுகிய பாதையில் செல்லக்கூடிய பாதையை பிரசாந்த் தேர்ந்தெடுத்து சென்றுள்ளார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததற்காக பாகிஸ்தான் அதிகாரிகளால் அவர் பிடிபட்டார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இமிக்ரேஷன் மற்றும் வெளிவிவகார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், பிரசாந்த் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.