இன்று ரிசல்ட்! 2 மாநில சட்டப்பேரவை! 2 மக்களவை! 48 சட்டமன்ற தொகுதிகள்! முழு விவரம் இதோ…
நடந்து முடிந்த மகாராஷ்டிரா , ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்கள் உட்பட 15 மாநிலங்களில் 50 தொகுதிகளில் (2 மக்களவை) இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதே போல 2 மாநிலத்தில் 2 மக்களவை தொகுதி இடைத்தேர்தல், 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.
2 மாநில சட்டப்பேரவை :
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக, சிவசேனா (ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் , சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களம் காண்கின்றன.
அதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13ஆம் தேதியும், மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 20ஆம் தேதியும் நடைபெற்றது. இதில், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் நேரடி களம் காண்கின்றன.
இடைத்தேர்தல் (மக்களவை) :
அடுத்து, கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் (நவம்பர் 13இல் தேர்தல்), மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் (நவம்பர் 20இல் வாக்குப்பதிவு) முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.
சட்டமன்ற இடைத்தேர்தல்கள் :
இதேபோல, 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.
அசாம் – 5 தொகுதிகள்,
பீகார் – 4 தொகுதிகள்,
சத்தீஸ்கர் – 1 தொகுதி ,
குஜராத் – 1 தொகுதி,
கேரளா – 2 தொகுதிகள்,
கர்நாடகா – 3 தொகுதிகள் ,
மத்திய பிரதேசம் – 2 தொகுதிகள்,
மேகாலயா – 1 தொகுதி,
பஞ்சாப் – 4 தொகுதிகள்,
ராஜஸ்தான் – 7 தொகுதிகள்,
சீக்கிம் – 2 தொகுதிகள்,
உத்திர பிரதேசம் – 9 தொகுதிகள்,
உத்திரகாண்ட் – 1 தொகுதி,
மேற்கு வங்கம் – 6 தொகுதிகள்.
என மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து முன்னணி நிலவரங்கள் வெளியாக உள்ளது.