“மழை நல்லா பெய்யட்டும் அப்போ தான் நல்லது.,” அமைச்சர் நேரு பதில்.!
தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டும். அப்போது தான் ஏரிகள் நிரம்பும் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை வராமல் இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அங்கங்கே பெய்து வரும் வேளையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 17 வரையில் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் எனக் கூறப்படுகிறது.
இந்த கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர்கள், பேரிடர் மேலாண்மை துறையினர் மீட்பு குழுவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கனமழை சூழ்நிலையை முறையாக கையாள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்படியான சூழலில், இன்று தாம்பரம் பகுதியில் புதிய அரசு கட்டடம் பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு , திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் மழை பற்றி தெரிவித்தார்
அவர் கூறுகையில், “மழை பெய்யட்டும், செம்பரம்பாக்கம் எல்லாம் நிரம்பாமல் இருக்கிறது. மழை பெய்து ஏரிகள் எல்லாம் நிறையட்டும். மக்களுக்கு குடிநீர் வேண்டும். மழை பெய்தால் மக்களுக்கு நல்லது. 2 நாள் சிரமத்தை எல்லாம் பாக்காதீங்க. ” என்று மக்களின் குடிநீர் தேவைகு மழை தேவை என அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், ” திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 15 மாநகராட்சிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 10 மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், தாம்பரம் மாநகராட்சிக்கு தனியாக ஆணையர் அலுவலகம் கட்டப்படுவதற்கு தமிழக முதலமைச்சர் முதலில் ரூ.30 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். பின்னர் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று தற்போது அது 50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கி அந்த பணி நடைபெற்று வருகிறது. ” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.