‘முக்கிய ஆட்கள் காலி ..ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது’- பிரதமர் நெதென்யாகு!
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து அளித்திருக்கிறோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது.
அதன் விளைவாக, ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய துல்லியாமான வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த சுஹைல் ஹுசைன் ஹுசைனி கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இப்பொது வரை, குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய தளபதிகள் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று டெல் அவீவில் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், “ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவுக்கு அடுத்தபடியாக இடங்களில் இருந்தவர்களை அழித்துவிட்டோம். இதனால், ஹிஸ்புல்லா அமைப்பு முற்றிலும் பலவீனமாகவிட்டது. லெபனான், ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுபடுங்கள். அப்போது தான் இந்த போர் முடிவுக்கு வரும்”, என்று லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.