நெல்லை கனமழையை பேரிடராக கருத வேண்டும்.! முதலமைச்சருக்கு சபாநாயகர் கடிதம்.!

Tamilnadu CM MK Stalin - Tirunelveli Rains

நெல்லை: கடந்த வாரம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடைகாலத்தில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவானது. இதனால், விவசாய நிலங்களுக்கு பயிர் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், சபாநாயர் அப்பாவு, பயிர் காப்பீட்டு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விவசாய பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால், நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. பணக்குடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அதேபோல், இராதாபுரம் தாலுகா, கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது. ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் ஏற்பட்டுள்ளது.

நெல்மணிகளின் சேதத்தை ஆய்வு செய்து, இதனை பேரிடராக கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்