ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்.. ஆனால்.., காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு பேட்டி.!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் என்றும், ஆனால் அவர் மதவெறி பிடித்தவர் இல்லை என்றும் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறினார்.
சில தினங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் அதிமுக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை எழுந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். அரசியல் உள்நோக்கத்திற்காக அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார் என்றும், ஜெயலலிதா அனைத்து மதத்திற்குமான தலைவர் என்றும் கருத்துக்களை கூறினர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசு அண்ணாமலையின் கருத்து பற்றி கூறுகையில், எனக்கு தெரிந்த வரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான். ஆனால் மதவெறி பிடித்தவர் இல்லை. தெய்வபக்தி உள்ளவர்கள் எல்லாம் மதவெறி பிடித்தவர்கள் அல்ல. எம்ஜிஆரும் சாமி கும்பிடுவார். சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் மதவெறி பிடித்தவர்கள் இல்லை. ஆன்மிகம் வேறு மதவெறி என்பது வேறு என திருநாவுக்கரசு தனது கருத்தை முன்வைத்தார்.