பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு! உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!
பப்புவா : பயங்கரமான நிலச்சரிவு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டுள்ளனர்.
கடந்த மே 24-ஆம் தேதி பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணிற்குள் புதையுண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன.
நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம், தேசிய மீட்புக் குழுவினற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு குறித்து பப்புவா நியூ கினியா பேரிடர் மீட்புக் குழு கூறியதாவது ” இந்த நிலச்சரிவு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 2,000 க்கும் மேற்பட்ட மக்களை நிலச்சரிவில் உயிருடன் மண்ணிற்குள் புதையுண்டு இருக்கிறார்கள். நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 20 முதல் 26 அடி ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிலச்சரிவில் பல வீடுகளும் சரிந்து விழுந்துள்ளதால் அதில் தூங்கி கொண்டு இருந்தவர்களையும் மீட்கப்பட்டு வருகிறது.
2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணிற்குள் புதையுண்டுள்ள நிலையில், சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது எனவும், பேரிடர் மீட்புக் குழு தகவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலச்சரிவில் ஏற்கனவே, 670 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக ஐ.நா அதிகாரி ஒருவர் முன்னதாக தகவலை தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.