கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை!
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்களை அமைத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதில் குறிப்பாக திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன், ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம் கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் பலம் குறித்து கேட்டறியப்பட்டது.
வெற்றி தவறினால் அமைச்சர் பதவி பறிப்பு.? முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!
இதையடுத்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி, எச்சரிக்கையும் விடுபட்டதாக தகவல் வெளியானது. அதில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் திமுக தலைவரின் கவனத்திற்கு எடுத்து சென்று பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை அனைவரது மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை வெற்றியை மாவட்ட செயலாளர்கள் தவறவிட்டுவிட்டால், அந்த தொகுதிக்கு பொறுப்பாக இருப்பவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.