கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக ஆர். அசோக் தேர்வு.. பாஜக அறிவிப்பு..!

கர்நாடக சட்டசபை முடிவுகள் வெளியான 6 மாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை பாஜக அறிவித்துள்ளது. மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது நாளில், எதிர்க்கட்சித் தலைவர் பெயரையும் பாஜக அறிவித்தது. அதன்படி பெங்களூரு பத்மநாபநகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவரும், ஒக்கலிகா சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான ஆர்.அசோக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.அசோக் மாநிலத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்.

மக்களவைத் தேர்தல்:

லிங்காயத் சமூகத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பாவின் மகனான பி.ஒய்.விஜயேந்திராவை மாநில பாஜக தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில் லிங்காயத் வாக்குகளைக் கவர பாஜக வியூகம் வகுத்தது. இப்போது மாநிலத்தின் மற்றொரு சக்திவாய்ந்த சமூகமான ஒக்கலிகக்களின் வாக்குகளை ஈர்க்க ஆர்.அசோகனை எதிர்க்கட்சித் தலைவராக பாஜக மேலிடம் தேர்வு செய்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூத்த தலைவர்கள் வாழ்த்து:

எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.அசோக் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக்கிற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பசவராஜ பொம்மை, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய ஆர். அசோக் “மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும், வரும் நாட்களில் கட்சியை பலப்படுத்த பாடுபடுவேன். எனக்கு அளித்த பொறுப்பை நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்