வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை சிறப்பாக நடத்தி முடித்த வீர தமிழன்கள் இருவர்!யார் இவர்கள்?
சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் இரு தமிழர்கள் முக்கியக் காரண இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் அரசின் அமைச்சரவையில் உள்ள தமிழர்களான விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் ஆகியோர் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் இருவருக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியவர் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரான பாலகிருஷ்ணன்.
ஏனென்றால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் சிறந்த நட்புநாடுகளாக ஒரு சில நாடுகள்தான் இருக்கின்றன. அதில் சிங்கப்பூர் மிகவும் முக்கியமாகும். அதனால்தான் இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்த விவரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் வாஷிங்டனுக்கும், வடகொரியத் தலைநகர் யாங்யாங்குக்கும், சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் தீவிரமாக பயணித்துச் சந்திப்பை முழுமை பெறச் செய்தார். அதிலும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு நடக்கும் தருவாயில் அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்து அறிவித்தார். அதன்பின், வாஷிங்டனுக்குச் சென்று அதிபர் டிரம்பை சமாதானம் செய்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக நடக்கத் துணையாக இருந்தவர் பாலகிருஷ்ணன் ஆவார்.
57-வயதான பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர். மருத்துவம் படித்த பாலகிருஷ்ணன், கண்பார்வை சிகிச்சையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அமைச்சர் சண்முகம். இவர் சிங்கப்பூர் அரசில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது. இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, தங்குமிடங்கள், சந்திப்பை சுமூகமாகக் கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார் சண்முகம்.
59-வயதான சண்முகம் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர். வடகொரியாவின் விவகார ஆணையத்தின் தலைவராக இருந்துவரும் சண்முகம்தான், சாங்கி விமானநிலையத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் , அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை வரவேற்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
சிங்கப்பூரில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், ‘‘70 ஆண்டுகள் அவநம்பிக்கை, போர், ராஜதந்திர உறவில் தோல்வி ஆகியவற்றுக்கு முடிவுகட்டும் விதமாக இந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்தச் சந்திப்புக்காக 2 வாரங்களாக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறோம். இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பகை தீர்ந்து விடுமா என்பது தெரியாது, ஆனால், நட்பு மலர்வதற்கான முதல்படியாக இருக்கும்.
இந்த சந்திப்புக்கு தேவையான அனைத்துச் செலவுகளையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொண்டது. ஏறக்குறைய ரூ.100 கோடிவரை செலவானது. 5 ஆயிரம் போலீஸார், உள்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன எனத் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப், அதிபர் கிம் ஆகியோர் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்புச் செய்ய ஏறத்தாழ 3 ஆயிரம் பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். மேலும், இந்திய உணவு வகைகள் புலாவ், மீன், சிக்கன், பருப்பு, சிக்கன் குருமா, அப்பளம் உள்ளிட்ட 41 வகையான உணவுகள் சிங்கப்பூர் அரசு சார்பில் தயார்செய்யப்பட்டு இருந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.