சில்லறை சிகரெட் விற்பனையை விரைவில் தடை செய்ய மத்திய அரசு திட்டம்!
சில்லறை சிகரெட் விற்பனையை விரைவில் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் நிலைக்குழு பரிந்துரைத்ததை அடுத்து, சில்லறை சிகரெட் ( loose cigarettes) விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு பரிந்துரைகளின்படி, ஒற்றை சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி அரசாங்கம் இ-சிகரெட்டுகளை தடை செய்தது. இந்த நிலையில், இந்தியாவில் சில்லறை அல்லது ஒற்றை சிகரெட் விற்பனையை விரைவில் தடை செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. எனவே, 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பிப்.1 அன்று அறிவிக்கும் முன்பே,சில்லறை சிகரெட் விற்பனைக்கான தடை வரலாம் என கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி, நாடு முழுவதும் புகையிலை விற்பனை மற்றும் அதன் பரவலை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்ள அனைத்து புகை மண்டலங்களையும் (smoking zones) அகற்ற வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், புகையிலை பொருட்களை பெட்டியில் மட்டுமே விற்பனை செய்து, நாடு முழுவதும் சில்லறை சிகரெட் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தெரிகிறது.