ஜூன் மாதத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் : மு.க.ஸ்டாலின்..
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஜூன் மாதத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால், டெல்டா பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
கொடைக்கானலில் 57ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டம் ஆகியவற்றை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் 3 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
மலர்க் கண்காட்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு சட்டப்போராட்டத்தின் மூலம் காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத் தந்துள்ளது என்றார். தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் அரசு சாதனைகளை புரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக அரசு கர்நாடகத்தில் அமைய உள்ள அரசுடன் நட்புரீதியாக பேசி, வருகிற ஜூன் மாதத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.