#BREAKING: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித் திட்டம் தீட்டவில்லை – ஓபிஎஸ்
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என ஓபிஎஸ் வாக்குமூலம்.
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் ஓபிஎஸ் அளிக்கும் வாக்குமூலம் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்தவகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சசிகலா சதித்திட்டம் திட்டவில்லை:
2011-12, அதற்குப்பின் சசிகலா, அவரின் குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலும் காவல்துறை திரட்டவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான் என சசிகலா தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.
ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு:
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதல்வரை தேர்ந்தெடுக்க கூறினார். ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்த நேரத்தில் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தேன். அப்போது, அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும். சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என ஜெயலலிதா கூறினார்.
தன்னை முதல்வராக ஜெ தேர்வு செய்தார்:
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் ஓபிஎஸ்தான் முதலமைச்சர், அவரது பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என நத்தம் விஸ்வநாதனுக்கு தனது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் ஜெயலலிதா கூறியதாகவும், தன்னை முதல்வராக ஜெ தேர்வு செய்தார் என்றும் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்கவும் ஜெயலலிதா கூறினார் எஎனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.