இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி சாதனை மனிதர்!
இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று 3 அடி கொண்ட மாற்றுத்திறனாளி சாதனை படைத்துள்ளார்.
இரண்டு கை மற்றும் கால்கள் நலமுடன் இருக்கும் மனிதர்களே வாழ்வில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில், தங்களுக்கு உடலளவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதை தங்கள் நிறைகளாக எடுத்துக் கொண்டு சாதனை படைத்து வரக்கூடிய மாற்று திறனாளிகளை நிச்சயம் நாம் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் ஹைதராபாத்தில் வசித்து வரக்கூடிய ஷிவ்பால் எனும் நபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பல சிரமங்களை எதிர்கொண்டு இந்தியாவிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும் இவரது இந்த சாதனை தெலுங்கு புக் ஆப் மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 வயதுடைய ஷிவ்பால் சுமார் 3 அடி உயரம் மட்டுமே உடையவர் என கூறப்படுகிறது. இவர் பட்டப் படிப்புகளும் முடித்துள்ளாராம்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பொழுது தன்னை பார்த்து மக்கள் கேலி செய்ததாகவும், ஆனால் தற்பொழுது ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளதால் தன்னை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போய் உள்ளார்கள் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.