தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த முயன்றால் எதிர்த்து போராடுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
- தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வை என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
- நீட் தேர்வை நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இருப்பினும் மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
மேலும், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் உகந்ததாக இருக்காது எனவும், உயர்கல்வி சேர்க்கை மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் தான் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், எனவே தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேசுகையில், மாணவர்களின் உடல்நிலையை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இருப்பினும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. ஒரு நாள் நடைபெற கூடிய தேர்வாக இருந்தாலும், அதன் மூலமும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படமாட்டாது எனவும், மீறி நடத்தப்பட்டால் நாங்கள் எதிர்த்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.