நேபாள் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரசண்டாவை சந்தித்த சீனத் தூதர்..!
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் ‘பிரசண்டா’ இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் கே.பி சர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியிடம் பரிந்துரைத்தார்.
இதை ஏற்ற ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அடுத்த ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையில் ஆளும் கட்சியிலே கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதற்கட்டமாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து கே.பி சர்மா ஒலி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாதவ் குமார் புதிய தலைவராக கட்சியின் மத்திய குழு நியமித்தது.
இந்நிலையில், இன்று நேபாளத்துக்கான சீனத் தூதர் ஹூ யான்கி ஆளும் நேபாள புஷ்பா பிரசண்டாவை அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகவும், நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்ததாகவும் புஷ்ப் கமல் தஹலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் இருதரப்பு அக்கறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரச்சந்தாவின் நெருங்கிய தலைவர் விஷ்ணு ரிசால் தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி பாராளுமன்றத்தை கலைத்து இடைக்கால தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பது சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது, தேர்தலுக்கு முன்னர் பிரிந்து போகக்கூடும். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தால், நேபாளி காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு நேபாளி காங்கிரஸ் நீண்டகாலமாக ஆதரவளித்து வருகிறது. சீனாவின் உத்தரவின் பேரில் ஓலி அரசு செயல்பட்டு வந்ததாகவும், நேபாள அரசின் செயல்பாட்டில் கணிசமான சீன தலையீடு இருந்தது எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது. சீனாவின் உத்தரவின் பேரில் இந்த புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது எனவும் கூறப்படுகிறது.
நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஓலிக்கு பதிலாக தஹால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.