விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Default Image

விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி  உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.

 நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், பாலங்கள், மின்கம்பங்களை  உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நவம்பர் இறுதி வாரத்தில் “நிவர்” புயல் மற்றும் கனமழையால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி – காவிரி டெல்டா விவசாயிகளின் வேளாண் பயிர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு சேதப்பட்டுள்ளன. மாநில பேரிடர் நிதியிலிருந்து 74 கோடி ரூபாயை விடுவித்து உத்தரவிட்ட அ.தி.மு.க. அரசு, அதை யாருக்குக் கொடுத்தது? என்ன செலவு செய்தது? என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.

கடுமையான இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கும் எந்த நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை.இடைக்கால நிவாரணமாக நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்குக என்று கோரிக்கை விட்டும், முதலமைச்சர் ஏனோ “வராத திட்டங்களுக்கு” அடிக்கல் நாட்டு விழாக்களிலும், அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் ரீதியாக விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் மட்டுமே கவனமாகவும் கருத்தாகவும் இருந்து வருகிறாரே தவிர – இடைக்கால நிவாரண உதவியை வழங்கிட முன்வரவில்லை.எனவே, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும்! செய்வாரா திரு. பழனிசாமி அல்லது எப்போதும் போல, பொய்களைச் சொல்லியே இனியும் பொழுது போக்குவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்