மும்பை கோரத் தாக்குதலின் 12 ஆவது நினைவு தினம் இன்று
மும்பையில் நடைபெற்ற தீவிரவாத கோரத் தாக்குதலின் 12வது நினைவு தினம் இன்று.
மறக்க முடியாத பெரும் துயரை மும்பை மக்கள் அடைந்த கோரமான 12வது நினைவு தினம் இன்று. ஆம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மக்கள் பரபரப்பாக தங்கள் வேலைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் துப்பாக்கி குண்டுகள் முழங்கி கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடந்தது. தங்கள் அருகில் இருந்தவர்களை திரும்பிப் பார்க்கும் சமயத்திலேயே தாங்களும் ரத்த வெள்ளத்தில் மிதந்த மும்பை மக்களின் ரத்தம் படிந்த நினைவு தினம் இன்று தான் அனுசரிக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் ஆயுதம் ஏந்தி கொண்டு கடல் வழியாக மீனவர்களை கொன்று விட்டு அவர்களின் படகுகள் மூலமாக மும்பைக்கு வந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் தாக்குதல் நடத்திய முதலிடம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான். அங்கு குவிந்திருந்த மக்களில் 58 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்தனர். அதன்பின் அஜ்மல் கசாப் வழி நடத்திய தாக்குதலின் படி சென்ற தீவிரவாதிகள் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்த்திய இரண்டே நிமிடத்தில் மும்பையின் முக்கிய புள்ளிகள் வசித்து வரக்கூடிய நாரிமன் இல்லத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் பலியான நிலையில், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் வெளிநாட்டினர் வசிக்கக்கூடிய மும்பையின் மிகப் பெரிய ஹோட்டல் தாஜ் மற்றும் ஓரியன் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இங்கு நடந்த தாக்குதல் தான் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. இதில் பல வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.
26ஆம் தேதி துவங்கிய 29-ஆம் தேதி வரை நீடித்த இந்த தாக்குதலில் தீவிரவாதிகளால் 300க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டு இருந்தனர். மொத்தமாக இந்த தீவிரவாத தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 450 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கசாப்பிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களின் ரத்தம் மண்ணில்இன்னும் கறையாகத்தான் இருக்கிறது. இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் மும்பை மக்களின் மனதிலிருந்து இந்த சம்பவம் மறந்த பாடில்லை.